கிராம மக்கள் பயன்பெறும் வகையில், தற்காலிக ரேஷன் கடை அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் நல்லுக்குறிச்சி ரேஷன் கடையில் பொருட்களை வாங்க சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர். குறிப்பாக, சுள்ளங்குடி மற்றும் நல்லுக்குறிச்சிக்கு இடையேயுள்ள பெரிய கண்மாயைக் கடந்து செல்வதால் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
மேலும், மழைக்காலங்களில் ரேஷன் கடைக்கு செல்ல முடியாமல் போவதால் அன்றாட பொருட்கள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், இது குறித்த தகவல் அறிந்த நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அமைச்சரிடம் பேசிய கிராம மக்கள், ரேஷன் கடைகளில் கொடுக்கும் பொருட்களையே நாங்கள் நம்பியுள்ளோம். அதனை 3 கிலோமீட்டர் தூரம் சென்று வாங்குவதில் எங்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளது. எனவே, எங்கள் பகுதியிலேயே ரேஷன் கடை அமைந்தால் எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
இதையடுத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக அப்பகுதியில் அமைந்துள்ள கலையரங்கத்தில் தற்காலிகமாக ரேஷன் கடையை அமைக்க உத்தரவிட்டார். மேலும், புதிய கடை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யுமாறும் துறைசார் அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.