காரியாபட்டி திருச்சுழி அருகே, பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில், நபார்டு கிராமிய சந்தை திறப்பு விழா நடைபெற்றது. சீட்ஸ் நிறுவன செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். நபார்டு வங்கி துணை பொது மேலாளர் ராஜசுரேஷ்வரன், ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சீட்ஸ் நிறுவன செயல் அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். நபார்டு வங்கி தமிழ்நாடு தலைமை பொது மேலாளர் ஆனந் கிராம சந்தையை திறந்து வைத்தார். அப்போது , அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து தன்னிறைவு பெறுவதற்காக நபார்டு வங்கி பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தி வருகிறது. மேலும், விளை நிலங்களில் தொடர்ச்சியாக விவசாயம் செய்வதற்காக நீர் பிடிப்பு மேம்பாடு திட்டம் செயல் படுத்தப்படுகிறது
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை வெளி சந்தைக்கு அனுப்பாமல் உள்ளூரிலே விற்பனை செய்து அதிக லாபம் கிடைப்பதற்காகத்தான் கிராமங்கள் தோறும் நபார்டு கிராம சந்தை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம் .
இங்கு இயங்கி வரும் – உழவர் உற்பத்தியாளர் சங்கம் பெரிய நிறுவனமாக உருவாக்க வேண்டும். உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளர்ச்சிக்கு நபார்டு வங்கி பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, விவசாய உற்பத்தியாளர்களுக்கு விளை பொருட்கள் கொண்டு வர வாகன வசதி சந்தை வளாகத்தில் குளிரூட்டப்பட்ட கிட்டங்கி வசதி அமைக்க நபார்டு வங்கி உதவி செய்யும்.
மேலும், கிராமங்களில் இளைஞர்களிடையே விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 20 – 35 வயதுக்குட்பட்ட இளஞர்களுக்கு பயிற்சிதிட்டம் நடை முறைபடுத்தப் படும்.
இந்த திட்டத்தில், விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருங்கிணைத்து 1 மாத கால பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு பொது மேலாளர் பேசினார்
விழாவில் , சுய உதவிக் குழு , தனி நபர்கள், மற்றும் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில், கனரா வங்கி மேலாளர் ராஜ்குமார், சமநிதி பொறுப்பாளர் மாயாண்டி மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.