திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ.அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாம்பசிவம் மகன் அஜித் . இவா், சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறாா்.
இவரது தந்தை சாம்பசிவம் காலமானதையடுத்து, அகரம் கிராமத்தில் உள்ள இடம் மற்றும் பெரும் பாக்கம் கிராமத்தில் தனது தாயார் சாந்தியின் பெயரில் உள்ள நிலத்தை அளவீடு செய்வதற்காக கடந்த 18ஆம் தேதி அஜித்குமார் பெரும்பாக்கம் கிராம நிா்வாக அலுவலரிடம் மனு அளித்திருந்தார்.
இதற்கு கிராம நிா்வாக உதவியாளா் அரி கிருஷ்ணன் மற்றும் தற்காலிக சர்வேயர் ரஞ்சித் குமார் ஆகியோர் இடத்தையும் நிலத்தையும் அளக்க ரூபாய் 15,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த காவலர் அஜித்குமார் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் இரண்டாயிரத்தை அஜித்குமார் இடம் கொடுத்து அனுப்பினர். பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் சர்வேயர் ரஞ்சித் குமார் மற்றும் விஏஓ உதவியாளர் அரி கிருஷ்ணன் இருந்தபோது அஜித்குமார் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் சப் இன்ஸ்பெக்டர்கள் மதன் மோகன் கோபிநாத் ஆகியோர் இரண்டு பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக நில அளவை துறையில் சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் நிலங்களை உட்பிரிவு செய்தல் பட்டா மாறுதல் போன்ற பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதை தடுக்க சிவில் பொறியியல், டிப்ளமோ படித்தவர்களுக்கு லைசென்ஸ் வழங்கி தொகுப்பூதிய அடிப்படையில் நில அளவைத் துறையில் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. அப்படி தேர்வானவர் தான் இந்த சர்வேயர் ரஞ்சித் குமார் என கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் தெரிவித்தனர்.