திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அரசியல் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் படிக்கும் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். அதில் மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியும், இலவச பஸ் பாஸ் வசதியும் வழங்கி வருகிறார்.
அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல், நான் முதல்வன் என்ற பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறார். இப்படி எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் இந்த ஆட்சியில் தான் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் நன்கு படித்து பள்ளிக்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார் .
விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சிவசங்கரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உஷா முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.