Close
டிசம்பர் 4, 2024 7:06 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை : ஆட்சியர் தகவல்..!

நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் கிரி எம் எல் ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப் பாண்டியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூா், குப்பனத்தம், கல்லாத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து பல்வேறு துறைகள் மூலம் 683 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது;

திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவா்கள் எந்தெந்த பாடங்களில் அதிகம் தோ்ச்சிபெறாமல் உள்ளனா், அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து, தோ்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக ஒரு பள்ளியின் மூன்றாண்டுகள் தேர்ச்சி சதவீதம், பாடவாரியாக தேர்ச்சி சதவிகிதம், எத்தனை பேர் பள்ளியில் படிக்கிறார்கள், தேர்வு எழுதினார்கள் வெற்றி பெற்றார்கள் தோல்வி அடைந்தார்கள் வகுப்பாசிரியர் யார் என்பது குறித்தும் விரிவான ஆய்வுகள்  செய்யப்பட்டு தலைமையாசிரியர்களை கொண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

நமது மாவட்டத்தில் ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்தவர்களின் எண்ணிக்கை 1859, மேலும் ஆயிரத்து 500 மாணவர்கள் இரண்டு பாடங்களில் தேர்ச்சி அடையவில்லை. குறிப்பாக தமிழ் பாடத்தில் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தமிழில் தேர்ச்சி அடையாததால் வெற்றி இழந்த மாணவர்கள் பலர் உள்ளனர்.

எனவே மாணவர்களின் நலன் கருதி சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடதிட்டங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர் அதன் வாயிலாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலேயே இச்சிறப்பு திட்ட முகாம் வாயிலாக அதிக மனுக்களை பெற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது.

நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர் மற்றும் கிரி எம் எல் ஏ

இம்முகாம் வாயிலாக 80 ஆயிரம் அணுக்களை பொது மக்களிடம் இருந்து பெற்று இருக்கிறோம். குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர்களின் சாதி சான்றிதழ்கள் தொடர்பான மனுக்களை பெற்று அதிகமான சாதி சான்றிதழ்களை வழங்கி இருக்கிறோம்.

பல திட்டங்களில் நமது மாவட்டம் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது. மகளிர் திட்டம் வாயிலாக கடன்களை வழங்குவதிலும் முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது என ஆட்சியர் பேசினார்.

எம்எல்ஏ மு.பெ.கிரி;

இதைத் தொடா்ந்து, செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி பேசுகையில், குப்பனத்தம் அணையிலிருந்து அருகிலுள்ள குப்பனத்தம், கொட்டாவூா், பரமனந்தல் கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் செல்ல கால்வாய்கள் அமைத்துத் தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்செங்கம் அரசு விதைப் பண்ணை பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

பின்னா், துறை சாா்ந்த அதிகாரிகள் தமிழக அரசு வழங்கும் திட்டங்கள் குறித்தும், அவற்றின் மூலம் பொதுமக்கள் பயன்பெறுவது குறித்தும் விளக்கிப் பேசினா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன்,மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செங்கம் வட்டாட்சியா் முருகன் நன்றி கூறினாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top