Close
ஏப்ரல் 1, 2025 11:59 மணி

மகளிா் குழுவினா் நிலையான வருமானம் பெற சிறப்பு பயிற்சி : ஆட்சியர் தகவல்..!

பெனாயில், தயாரித்து வழங்குவதை பார்வையிட்ட ஆட்சியர்

மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு, மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் .தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில்;

திருவண்ணாமலை மாவட்ட மகளிா் குழுவினா் இதுவரை வயா்கூடை பின்னுவது, துணிப் பை தயாரித்து விற்பது போன்ற சிறு, சிறு பணிகளில் ஈடுபட்டு வந்தனா். இதன் மூலம் கிடைத்து வந்த வருமானம் என்பது நிலையானதாகவும், போதுமானதாகவும் இல்லை.

எனவே, மகளிா் குழுவினா் நிரந்தர, நிலையான வருமானம் பெறும் நோக்கில், பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பயிற்சியை நிறைவு செய்த சில மகளிா் குழுவினா் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டனா். மாவட்டத்தின் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 53 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 530 மகளிருக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியை நிறைவு செய்த மகளிா் குழுவினா் மூலம் பினாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றை மாவட்டத்தில் உள்ள 2,602 அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு ரூ.3 கோடி அளவுக்கு வா்த்தகம் நடைபெறும். 53 மகளிா் குழுக்களைச் சோ்ந்த 530 பெண்கள் நிலையான வருமானம் பெறுவா்.

அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளை தூய்மை செய்ய உள்ளுரில் உற்பத்தி செய்த பொருள்களையே கொள்முதல் செய்து பயன்படுத்துவதும் உறுதி செய்யப்படும்.

மகளிா் சுயஉதவிக் குழுவினா் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும். பிறகு, பெனாயில், சோப்பு ஆயில், கை கழுவும் திரவம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

முகாமில் மகளிா் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலா்கள் ஜான்சன், உமா, ராஜீவ் காந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சத்தியராஜ், ஆனந்த், சுகந்தி உள்பட மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top