நாமக்கல் :
சூறைக்காற்றால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்க ரூ. 3.09 லட்சம் நிவாரண நிதியை கலெக்டர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டும், கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. ஆகும். தற்போது வரை (27.11.2024) 744.72 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 63.94 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில், கடந்த அக்டோபர் மாதம் வரை நெல் 5,969 எக்டர்,
சிறுதானியங்கள் 64,924 எக்டர், பயறு வகைகள் 9664 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 27,851 எக்டர், பருத்தி 1,599 எக்டர் மற்றும் கரும்பு 7,797 எக்டர் என மொத்தம் 1,17,804 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைப் பயிர்களில் தக்காளி 498 எக்டர், கத்திரி 294 எக்டர்,
வெண்டை 253 எக்டர், மிளகாய் 185 எக்டர், மரவள்ளி 1,764 எக்டர், வெங்காயம் 2,599 எக்டர், மஞ்சள் 1,929 எக்டர் மற்றும் வாழை 2,223 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, பரமத்திவேலூர் மற்றும் திருச்செங்கோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேமிக்க தலா 25 டன் கொள்ளளவு உள்ள குளிர்பதன கிடங்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த கிடங்குகளை விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சேமித்து நல்ல சந்தை விலை கிடைக்கும்போது விற்பனை செய்து பயனடையலாம் என கூறினார்.
தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து சூறைக் காற்றினால் சேதமடைந்த 40 விவசாயிகளின் பாக்கு, வாழை மற்றும் புடலை போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு ரூ. 3.09 லட்சம் நிவாரண நிதிக்கான காசோலைகளை வழங்கினார்.
மேலும், பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கிய பள்ளிபாளையம் வட்டாரத்தை சார்ந்த விவசாயி பழனிசாமிக்கு ரூ.15,000 மற்றும் எலச்சிபாளையம் வட்டாரத்தை சார்ந்த விவசாயி பழனிசாமிக்கு 2ம் பரிசாக ரூ.10,000 பரிசு மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் மல்லிகா, நில எடுப்பு டிஆர்ஓ சரவணன், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் அருளரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.