Close
டிசம்பர் 4, 2024 7:04 மணி

சோளிங்கர் பெரியமலை சுவாதி திருமஞ்சனத்தில் சொதப்பிய அறநிலையத்துறை

கார்த்திகை மாதம் என்றாலே சோளிங்கர் யோக நரசிம்மர் கோவில் களை கட்டிவிடும். இந்த மாதத்தில் தான் நரசிம்மர் கண் திறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் இன்று கார்த்திகை வெள்ளியன்று நரசிம்மருக்கு உகந்த சுவாதி நட்சத்திரம் வந்ததால் சுவாதி திருமஞ்சனம் நடைபெற்றது.
பொதுவாக சுவாதி திருமஞ்சனம் என்பது நரசிம்மருக்கு உகந்தது என்பதால் பக்தர்கள் திருமஞ்சனதிற்கு பணம் செலுத்தி திருமஞ்சனத்தை தரிசிப்பார்கள்.
ஆனால் இன்று நடைபெற்ற சுவாதி திருமஞ்சனத்தின் போது அறநிலையத்துறை ஊழியர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொதுவாக பல்வேறு கோவில்களில் நடைபெறும் அபிஷேகம் எனப்படும் திருமஞ்சனத்திற்கு பக்தர்கள் கட்டணம் செலுத்துவார்கள். கட்டணம் செலுத்திய பக்தர்களுக்கு திருமஞ்சனம் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் இன்று சோளிங்கர் கோவிலில் நடந்தது வித்தியாசமானது. சுமார் 150 பக்தர்கள் சுவாதி திருமஞ்சனத்திற்கு கட்டணம் செலுத்தியநிலையில் அவர்களை சரியான முறையில் நடத்தவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இன்று காலை விஸ்வரூப தரிசனத்தின்போது கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. கூட்டத்தை ஒழுங்குபடுத்த இயலாத அறநிலையத்துறை ஊழியர் ஒருவர், விஸ்வரூப தரிசனத்திற்கு யாரையும் அனுப்ப முடியாது, உங்களால் முடிந்ததை பாருங்கள் என அகம்பாவமாக கூறினார்
அதன்பின்னர் சுவாதி திருமஞ்சன டிக்கெட் இருந்தவர்களை முறையாக உள்ளே அனுப்பவில்லை.
பொதுவாக எந்த கோவிலாக இருந்தாலும் திருமஞ்சன டிக்கெட் வைத்திருப்பவர்களை அவர்களது டிக்கெட் வைத்து உள்ளே அனுப்புவார்கள். ஆனால், சோளிங்கர் பெரிய மலையில் ஆட்டு மந்தை கூட்டத்தை அனுப்பவது போல அனுப்பினர். யார் திருமஞ்சனத்திற்கு பணம் கட்டியுள்ளனர் என பரிசோதிக்கவே இல்லை.
உள்ளே சென்றால் ஏற்கனவே பல பக்தர்கள்(?) உள்ளே இருந்தனர். அவர்கள் எப்படி வந்தார்கள் என்பது அந்த நரசிம்மருக்கே வெளிச்சம்.
சரி அது தான் போகட்டும். திருமஞ்சனம் முடிந்ததும் பிரசாதம் வாங்கலாம் என சென்றால், ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பிரசாதம் கிடைக்கவில்லை. ஆன்லைன் மூலம் பணம் கட்டியவர்கள் விபரம் அவர்களிடம் இல்லையா? அல்லது பக்தர்கள் மீது உள்ள அலட்சியமா?
இதனால் பிரசாதம் பதிவு செய்த பக்தர்கள் பலர் பிரசாதம் வாங்காமலே மலையை விட்டு இறங்கினர்,
இது மட்டுமல்ல,  அறநிலையத்துறை இன்றும் கொரானா காலத்தில் இருந்து வெளிவரவில்லை. அந்த காலகட்டத்தில் இருந்த கட்டுப்பாடுகளையே இன்னும் அதன் இணையதளத்தில் வைத்துள்ளது. அதுமட்டுமல்ல, தாயார் திருமஞ்சனம் என்பதற்கு தயார் திருமஞ்சனம் என இணைய தளத்தில் உள்ளது. இதனையே சரிசெய்யாதவர்கள் பக்தர்களையா கண்டுகொள்ளப் போகிறார்கள்?
பணம் கொடுக்கும் பக்தர்களுக்கு பக்கத்தில் காட்சி அளிக்கும் இறைவன், தர்ம தரிசனத்தில் மங்கலாக காட்சி தருகிறார் என ஒரு கவிதை உண்டு. ஆனால் அதனை சோளிங்கர் பெரியமலை பொய்யாக்கியுள்ளது.
பணம் இருந்தால் மட்டும் போதாது, உங்களுக்கு அறநிலையத்துறை ஆட்களை தெரிந்திருக்க வேண்டும் என்பதே அது.
ஒன்று நிச்சயம்.  இருக்கும் இடத்தில் இறைவனை தேடு, அது உன்னுள் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த சம்பவம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top