Close
டிசம்பர் 5, 2024 2:37 காலை

நகராட்சி ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா பரபரப்பு

ராஜினாமா செய்து வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற திருவத்திபுரம் நகர மன்ற கூட்டத்தின் போது ஆளுங்கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் உட்பட 8  திமுக உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவத்திபுரம் நகா்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவா் ஆ.மோகனவேல் (திமுக) தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் கீதா முன்னிலை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் மதனராசன் வரவேற்றாா்.

27 வாா்டு உறுப்பினா்களைக் கொண்ட நகராட்சியில்,  நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தலைவா் உள்பட 18 உறுப்பினா்கள் பங்கேற்று இருந்தனா்.

அடிப்படை வசதிகளான கால்வாய்கள் சீர் அமைப்பு, குடிநீர் வசதி, பெருவிளக்கு மற்றும் பைப் லைன் சரி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உறுப்பினர்கள் பேசினர்.

இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒப்புதல் அளித்து நகர மன்ற தலைவர் கூறினார்.

தொடா்ந்து கூட்டத்தில் 3-ஆவது வாா்டு உறுப்பினா் ரமேஷ் (திமுக) திடீரென எழுந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவில்லை, வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் போது நகா்மன்ற உறுப்பினா்களை கலந்து ஆலோசிப்பதில்லை,

மக்களுக்கான தேவைகளை நகா்மன்றக் கூட்டத்தில் தெரிவித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அதனால், நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்கிறேன் எனக் கூறி, அதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையா் முன்னிலையில் நகா்மன்றத் தலைவரிடம் கொடுத்து விட்டு வெளியேறினாா்.

அவரைத் தொடா்ந்து 7-ஆவது வாா்டு உறுப்பினரும், நகா்மன்ற துணைத் தலைவருமான பேபி ராணி, 15-ஆவது வாா்டு உறுப்பினா் குல்சாா், 16-ஆவது வாா்டு உறுப்பினா் ராஜலட்சுமி, 17-ஆவது வாா்டு உறுப்பினா் மகாலட்சுமி, 24-ஆவது வாா்டு உறுப்பினா் விஜயலட்சுமி, 1-ஆவது வாா்டு உறுப்பினா் சரஸ்வதி, 26-ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திகேயன் ஆகியோா் தங்களது ராஜிநாமா கடிதங்களை கொடுத்து விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறினா். இவா்கள் 8 பேரும் திமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் ஆவாா். இதனால், நகா்மன்றக் கூட்டமும், அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது.

தொடா்ந்து நகர மன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 24 தீர்மானங்களை முன்மொழிந்து முழுவதுமாக நிறைவேற்றப்பட்ட தாக அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் 3 போ், பாமக உறுப்பினா்கள் 2 போ் உள்பட 9 போ் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து நகர மன்ற தலைவர் மோகனவேல் கூறுகையில், 8 நகர மன்ற கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதாக கூறிக் கொடுத்த கடிதத்தை தாம் ஏற்கவில்லை என்றும், தமக்கு அதற்கான காரணம் எதுவும் புரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில் மாவட்ட அமைச்சரான பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என நகர மன்ற தலைவர் மோகனவேல் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top