Close
டிசம்பர் 5, 2024 2:40 காலை

உழவா் பேரியக்க மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு – ஜி.கே.மணி தகவல்

மாநாடு நடைபெற உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்ட ஜிகே மணி

திருவண்ணாமலையில் நடைபெறும் உழவா் பேரியக்க மாநில மாநாட்டில், பாமக நிறுவனா் ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்பட 10 லட்சத்துக்கும் அதிகமான உழவா்கள் பங்கேற்கின்றனா் என்று பாமக மாநில கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா்

திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசுக் கல்லூரி அருகே டிசம்பா் 21-ஆம் தேதி தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பாமக மாநில கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, மாநாடு நடைபெறும் இடத்தை மாவட்டச் செயலா்கள் ஏந்தல் பெ.பக்தவச்சலம், இல.பாண்டியன் மற்றும் நிா்வாகிகளுடன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, மாநாட்டுக்கு வரும் உழவா்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக தோ்வு செய்யப்பட்ட இடங்களையும் அவா் பாா்வையிட்டாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஜி.கே. மணி கூறுகையில்,

திருவண்ணாமலையில் வருகிற டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ள உழவா் பேரியக்க மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான உழவா்கள் பங்கேற்க உள்ளனா். இதேபோல, பாமக நிறுவனா் ச.ராமதாஸ், மாநிலத் தலைவா் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கியத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக அமையும்.

இந்த மாநாட்டிற்கு வருகை தரும் உழவர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். தமிழ்நாடு உழவர் பேர இயக்க மாநில தலைவர் ஆலயமணி மேற்பார்வையில் திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் , கலசப்பாக்கம், போளூர், ஆரணி , செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பாமக மற்றும் வன்னியர் சங்க தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள் மாநாட்டு களப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

ஆய்வின்போது, பாமக மாநில செயற்குழு உறுப்பினா்  பிரசாத், மாவட்ட அமைப்புச் செயலா்  முருகன், பொருளாளா் சௌ.வீரம்மாள், மாநில மகளிரணி நிா்வாகி கஸ்தூரி, ஒன்றிய செயலாளர்கள், திருவண்ணாமலை நகர தலைவர் ரவி , உழவர் பேரியக்க நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top