நாமக்கல் மாநகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் மாநகராட்சி ஆபீஸ் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பல மாதங்களாக மார்க்கெட்டிற்கு வெளியே வாழை இலை கடைகள் செயல்பட்டு வந்தன. அதனால், பாதுகாப்பற்ற சூழ்நிலை இருந்தது வந்தது. அதனால், மார்க்கெட் வளாகத்திற்குள் கடைகள் ஒதுக்கித்தர வேண்டும் என, வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற மார்க்கெட் காண்ட்ராக்டர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன், கடைகளை ஒதுக்கீடு செய்துள்ளனர்.
தொடர்ந்து, வாழை இலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், ரிப்பன் வெட்டி வாழை இலை கடைகளை திறந்து வைத்தார்.
பேரமைப்பின் மாவட்ட பொருளாளர் சீனிவாசன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பத்மநாபன், இணை மார்க்கெட் சங்க செயலாளர் சிவக்குமார், பொருளாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.