வங்க கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. தவிர கோவிலின் மேல்தளத்தில் இருந்து விழுந்த தண்ணீர் , பிரகார பாதை முழுவதும் தேங்கியுள்ளது.
நுழைவாயில் மற்றும் கோவிலை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கோவிலின் அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்பதால் மழை நீரை வாடிகால் வழியாக வெளியேற்றுமாறு பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.