வங்க கடலில் உருவாகி உள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கன மழை நேற்று காலை முதல் தொடர்ந்து இன்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றால் பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன,
திருவண்ணாமலையில் 18 செ.மீ, வெம்பாக்கம் பகுதியில் 112.4 மி.மீ,செய்யாறு பகுதியில் 45 மி.மீ. மழை பதிவானது.
புயல் காரணமாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் கூரை வீடுகளில் வசித்து வரும் மக்களின் நலன் கருதி வருவாய்த் துறை சாா்பில் செய்யாறு வட்டத்தில் புளியரம்பாக்கம், விண்ணவாடி, கீழ்நீா்குன்றம், செங்கட்டாங்குண்டில், அளத்துறை, பையூா், நெடுங்கல், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களிலும், வெம்பாக்கம் வட்டத்தில் தூசி, மாத்தூா், பிரம்மதேசம் ஆகிய கிராமங்களிலும் தங்குவதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
செய்யாறு வட்டம், கீழ்நீா்குன்றம் கிராமத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 7 குடும்பங்களில் இருந்து 35 பேரும், செங்கட்டான்குண்டில் கிராமத்தில் 3 குடும்பங்களைச் சோ்ந்த 10 பேரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா தூசி, மாத்தூா், கீழ்நீா்குன்றம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை அலுவலா்களுடன் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மழையால் செய்யாறு – வந்தவாசி சாலையில் எச்சூா் கிராமப் பகுதியில் இருந்த புளிய மரம் திடீரென சரிந்தது.
மரத்தை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்யாறு பகுதியில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரை நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றினா்
மழையால் வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், சுகாதார நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மின் கம்பம் சாய்ந்து வாகனம் சேதமடைந்தது.சாய்ந்த மரங்களை வருவாய்த் துறையினா் அப்புறப்படுத்தினா்.
மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தனர். அது மட்டுமல்லாமல் காற்று சுழன்று, சுழன்று வீசிதால் வீடுகளில் இருந்தவர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் காணப்பட்டனர். ஏதாவது மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஒவ்வொருவரிடமும் தொற்றிருந்ததை பார்க்க முடிந்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
திருவண்ணாமலை, செங்கம், சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், வேட்டவலம், ராந்தம், பெலாசூா், சனிக்கவாடி என பல்வேறு கிராமங்களில் ஃபென்ஜால் புயல் தொடா் மழையால் பொதுமக்கள் விவசாயப் பணிக்கும், ஊரக வேலைத் திட்டப்பணிக்கும் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினா்.
ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல முடியவில்லை. மேலும், பயிரிடப்பட நிலம் மற்றும் குடியிருப்பு சுற்றுப்புறப் பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டம் உயரும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கலசப்பாக்கம் அடுத்த மேல் சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள மிருகண்டா நதியின் முழு கொள்ளளவு 22.97 அடியாாகும்.
தற்போது அணையில் 17.55 அடி தண்ணீர் உள்ளது அணையில் 87 மில்லியன் கன அடி வரை தேக்கி வைக்கலாம் தற்போது ,58.379 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் செயல்பாட்டில் உள்ளது. மழை தொடர்பான தகவல்களை கட்டுப்பாட்டு அறை எண் 1077, மற்றும் தொலைபேசி எண் 04175-232377 தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்