Close
ஏப்ரல் 3, 2025 12:33 மணி

முகூர்த்த சீசன் எதிரொலி: நாமக்கல் உழவர் சந்தையில் ரூ. 11.20 லட்சம் மதிப்பில் காய்கறிகள் விற்பனை..!

நாமக்கல் உழவர் சந்தை (கோப்பு படம்)

நாமக்கல் :
கார்த்திகை மாதம் திருமண முகூர்த்த சீசன் துவங்கியதால், நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் சுமார் 25 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 11.20 லட்சம் மதிப்பில் விற்பனையானது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.

பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்குதேவையான காய்கறி மற்றும் பழங்களை வாங்கி செல்வது வழக்கம்.

தற்போது கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதால், ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக விரதம் மேற்கொள்ளும் பலர் அசைவத்தை கைவிட்டு, சைவத்திற்கு மாறியுள்ளனர். மேலும் இன்று முதல் திருமண முகூர்த்த சீசன் துவங்குகிறது. இதனால் இன்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெற்றது.

மொத்தம் 126 விவசாயிகள் உழவர் சந்தைக்கு காய்கறி,பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். மொத்தம் 21,065 கிலோ காய்கறிகள் மற்றும் 4,200 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம் 25 ஆயிரத்து 285 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 5 ஆயிரத்து 57 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வருகை தந்து காய்கறி மற்றும் பழங்களை வாங்கிச் சென்றனர்.

இன்று தக்காளி ஒரு கிலோ ரூ. 50, கத்தரி ரூ. 70, வெண்டை ரூ. 56, புடலங்காய் ரூ. 76, பீர்க்கங்காய் ரூ. 80, பாகற்காய் ரூ. 58, அவரை ரூ. 85, சின்ன வெங்காயம் ரூ. 42, பெரிய வெங்காயம் ரூ. 70, தேங்காய் ரூ. 52 என்ற விலையில் விற்பனையானது. இன்று ஒரே நாளில் விற்பனையான காய்கறி மற்றும் பழங்களின் மொத்த மதிப்பு ரூ. 11 லட்சத்து, 20 ஆயிரத்து 240 ஆகும் என உழவர் சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top