காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றியவர்களுக்கு கயிலை மணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில் சித்தாந்த அறிஞர்கள் மற்றும் திருமுறை அருட்பணிக்கு பெரிதும் தொண்டாற்றி வருபவர்களுக்கு கயிலைமணி விருது வழங்கும் விழா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு அறக்கட்டளை நிறுவனர் சதாசிவம் தலைமை வகித்தார்.
புலவர் சரவண சதாசிவம்,சிவஞான அருள்நெறி அறக்கட்டளை நிறுவனர் ஞானப்பிரகாசம், காஞ்சி சிவனடியார் கூட்டத்தின் தலைவர் பூவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் பொருளாளர் பெருமாள் வரவேற்றார்.
விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகள் மற்றும் நிடுமாமிடி வீரேஸ்வர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
விழாவில் அருணை பாலறாவாயன் (சைவ சித்தாந்தப் பேரொளி) உமாசங்கர் (அருட்பணி தருமசீலர்) ஜெயபாலன் (அருட்பணி அருந்தொண்டர்) அன்பழகன் (திருமுறை சீர்பரவுவார்) சுந்தரேசன் (திருமுறைச் செல்வர்) தணிகாசலம் (அருட்பணிச்செம்மல்) மற்றும் மாறவேல் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.விருதாளர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்கள்.
விருதாளர்களை பனசை. மூர்த்தி, காஞ்சிபுரம் வச்சிரவேல், ஏகனாம்பேட்டை மோகனவேலு ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.
அறக்கட்டளை பொருளாளர் ராஜகோபால் நன்றி கூறினார். மாலையில் நடைபெற்ற விழாவில் கைலாய யாத்திரை சென்று வந்த 33 சிவனடியார்களுக்கு கயிலை மணி விருதுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஓதுவார் சற்குருநாதன் தலைமையில் திருமுறை இன்னிசையும் நடைபெற்றது.