தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை முதல் இந்த மழை கனமழையாக தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் 36 மணி நேரத்தைக் கடந்து பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
திருவண்ணாமலை கோயில் பின்புறம் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண் சரிவின் போது 14 அடி உயர பாறை ஒன்று உருண்டு 3 வீடுகளின் மீது விழுந்துள்ளது.
இதன் காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளவில்லை
ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்தனர்.
போதிய மின் விளக்கு வசதி இல்லாததாலும் இரவு நேரம் என்பதால் தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுவட்டராப் பகுதியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மண் அரிப்பை காரணமாக பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. பாறைகளை அகற்றினால் மேலும் மண் சரிவு ற்ர்பட வாய்ப்புள்ளதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு அரக்கோணத்தில் இருந்தும், சென்னையில் இருந்தும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் அழைத்துள்ளதாகவும். இவா்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட பிறகே 7 பேரின் நிலை என்ன என்பது தெரியவரும் என்று ஆட்சியர் கூறினார்.
மீட்கும் பணி
அவர்களை கண்டுபிடித்து மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவு 1 மணியளவில் திருவண்ணாமலையை வந்தடைந்தனர். முதற்கட்டமாக, மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாயைப் பயன்படுத்தலாமா என்கிற முடிவுக்கு வந்தனர்.
இதனிடையே, அரக்கோணத்தில் இருந்தும் ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக் உள்ளிட்ட மீட்புப் பணிக்கான சில உபகரணங்களையும் வரவழைத்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால், திருவண்ணாமலை மாவட்டமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.