தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை முதல் இந்த மழை கனமழையாக தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் 36 மணி நேரத்தைக் கடந்து பெய்தபடியே இருந்தது. இதனால் சாலைகள், கால்வாய்கள், குளங்கள், ஏரிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேத்துப்பட்டில் 217.4 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, திருவண்ணாமலையில் 75, செங்கத்தில் 90.7, போளூரில் 69.8, ஜமுனாமரத்தூரில் 214, கலசப்பாக்கத்தில் 161, தண்டராம்பட்டில் 155, ஆரணியில் 180, செய்யாற்றில் 144, வந்தவாசியில் 162.6, கீழ்பென்னாத்தூரில் 203.6, வெம்பாக்கத்தில் 140.4 மில்லி மீட்டா் மழை பதிவானது.
ஆட்சியா் குடியிருப்புக்குள் புகுந்த மழை வெள்ளம்:
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரிலேயே வேங்கிக்கால் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பியது. தொடா்ந்து பெய்த மழையால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீா், வேலூா் சாலையைக் கடந்து ஆட்சியா் பாஸ்கர பாண்டியனின் குடியிருப்பை ஒட்டி செல்லும் கால்வாயில் சென்றது.
அதிகளவில் தண்ணீா் சென்றதால் கால்வாயில் இருந்து வெளியேறி ஆட்சியா் அலுவலக குடியிருப்பின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தது.
2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலையிலிருந்து வழிந்தோடும் தண்ணீரால், திருவண்ணாமலை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பே கோபுரம் தெரு, சின்னக்கடை தெரு, போளூர் சாலை, வேலூர் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மத்திய பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.
மழையின் தாக்கம் தீவிரமாக உள்ளதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. காய்கறிகள் போதியளவு கிடைக்கவில்லை. மழையால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகப் பால் வியாபாரிகள் கூறுகின்றனர். நகரப் பகுதியில் ஓரளவு மின்சாரம் இருந்தாலும், கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலின் தாக்கம், திருவண்ணாமலை மாவட்டத்தைப் புரட்டிப் போட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு: புயலின் தாக்கம் தீவிரமடைந்து அதிக கனமழை பெய்து வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை
மழை, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தை 1077, 04175-232377 என்ற எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.