Close
டிசம்பர் 5, 2024 2:41 காலை

மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சிக்காக 16 பேர் உடல் தானம்: கலெக்டரிடம் கடிதம்..!

மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, 16 பேர் உடல் தானம் செய்வதற்கான ஒப்புதல் கடிதத்தை, கலெக்டர் உமாவிடம் அளித்தனர்.

நாமக்கல் :
மருத்துவக்கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, நாமக்கல் கலெக்டரிடம் 16 பேர் உடல் தானம் செய்வதற்காக ஒப்புதல் கடிதம் வழங்கினார்கள்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 418 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

மனுக்களை பரிசீலனை செய்து, சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிப்பதற்காக, தலா ரூ.50,000 வீதம் 9 பேருக்கு மொத்தம் ரூ. 4.50 லட்சம் கல்வி உதவித்தொகையினை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து, அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்காக 16 பேர் தங்களது உடல்களையும், 1 நபர் உடல் உறுப்பு தானம் செய்யவும் சம்மதம் தெரிவித்து அதற்கான விருப்ப கடிதத்தினை கலெக்டரிடம் வழங்கினர்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் தினத்தை குறிக்கும் கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு ஊதா நிற பேட்ஜ் அணிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் டிஆர்ஓ சுமன், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top