திருவண்ணாமலை கோயில் பின்புறம் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி நகரில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு காரணமாக பல வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண் சரிவின் போது 14 அடி உயர பாறை ஒன்று உருண்டு 3 வீடுகளின் மீது விழுந்துள்ளது.
இதன் காரணமாக ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மேல் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதத்துக்குள் அவர்கள் சிக்கிக் கொள்ளவில்லை.
போதிய மின் விளக்கு வசதி இல்லாததாலும் நேற்று இரவு நேரம் என்பதால் தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுவட்டராப் பகுதியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மீண்டும் தொடங்கிய மீட்பு பணி
இந்நிலையில் காலையிலிருந்து மீண்டும் மீட்பு பணி தொடங்கியது. 2வது நாளாக மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் என்.டி.ஆர்.எஃப். உடன் இணைந்து மீட்பு பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மீது விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் – 35 வீரர்களும், திருவண்ணாமலை மாவட்ட காவல் கமாண்டோ குழுவினர் – 50 வீரர்களும், மாநில மீட்பு படையினர் – 20 வீரர்களும், திருவண்ணாமலை ஆயுதப்படை காவலர்கள் – 40 நபர்கள் மற்றும் காவல்துறை சார்பாக 60 நபர்களும் என மொத்தம் 170 பேர் மீட்டு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகரன், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி கமாண்டர் ஸ்ரீதர் ஆகியோர் பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் ஒரு ராட்சத பாறை
பாறை சரிந்து விழுந்து வீடுகள் மண்ணில் புதைந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு மேலும் ஒரு ராட்சத பாறை சரிந்துள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு
மண் சரிவில் சிக்கி கொண்டவர்களை மீட்டெடுக்கும் பணிகள் இரண்டாவது நாளாக திங்கட் கிழமையும் தொடரும் நிலையில் மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,
மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாநில கண்காணிப்புக் குழுவினர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பலர் திருவண்ணாமலையில் இரு நாட்களாக இங்கு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த மூன்று தினங்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது.
இதுவரை திருவண்ணாமலையில் மண் சரிவு என்பது ஏற்பட்டதே இல்லை. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்து அடிவாரப் பகுதியில் இருந்த 2 வீட்டின் மேல் விழுந்துள்ளது. ஒரு வீட்டில் இருந்தவர்கள் தப்பித்துள்ளனர். இன்னொரு வீட்டில் இருந்த 4 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை, ஒரு பெரியவர், தாய் ஆகியோர் இடர்பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
அவர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழ்வான பகுதியைச் சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. இடிபாடுகளில் ஏழு பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். மண் மற்றும் கல்லின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
மிகப்பெரிய பாறை ஒன்றுஉள்ளது. இந்தப் பாறை உருண்டால், மேலும் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சேதம் ஏற்படும் போது, மலைகளை பிளந்து எடுக்கக் கூடிய பணி செய்பவர்களை, நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஏற்காட்டில் இருந்து அழைத்துள்ளோம். மதியத்திற்குள் வந்து விடுவார்கள்.
அதுவும் கீழே இருக்கும் மண் உறுதித்தன்மை பெற்ற உடனே தான் மலைகளை உடைக்க முடியும். மேற்கொண்டு அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியுள்ளார். அவர்கள் வந்த பிறகு, கற்களை எல்லாம் அகற்றிய பிறகு தான், உள்ளே இருப்பவர்களின் நிலைமை தெரியும். அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.
இவ்வாறான பல்வேறு சமயங்களில் பலரை சில சமயம் காப்பாற்றி இருக்கிறோம் . அதனால் , மீட்புப்பணிகளில் நம்பிக்கையுடன் பணிகளை தொடர காத்திருக்கிறோம். போதுமான அளவுக்கு இங்கு மீட்பு பணி வீரர்கள் இருக்கிறார்கள்.
இது குறுகிய பாதை என்பதால் பெரிய இயந்திரங்களை உபயோகப்படுத்த முடியவில்லை. ஒருவர் உள்ளே போகும்படி தான் வழி இருக்கிறது. ஆட்கள் முலமாக தான் மீட்பு பணிகளை செய்ய வேண்டி இருக்கிறது என திருவண்ணாமலை மண்சரிவு மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
குறுகலான பாதை :
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதி குறுகலான பாதை என்பதாலும் பெரிய கனரக வாகனங்கள் உள்ளே வர முடியாத காரணத்தினாலும் மீட்பு பணி மிகவும் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.
ஜேசிபி போன்ற வாகனங்களோ பாறைகளை உடைக்கக்கூடிய பெரிய உபகரணங்களோ கொண்டு செல்ல முடியாத காரணத்தினால் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் கைகளாலேயே பாறைகளை உடைத்தும் அப்புறப்படுத்தியும் வருகின்றனர் இதன் காரணமாக மீட்பு பணி சவாலான ஒன்றாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.