Close
டிசம்பர் 4, 2024 8:33 காலை

தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றணும் : மத்திய அமைச்சரிடம் நாமக்கல் எம்.பி. கோரிக்கை..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், டில்லியில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் :
தமிழகத்தில் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்தார்.

நாமக்கல் லோக்சாப தொகுதி கொமதேக எம்.பி., மாதேஸ்வரன், டில்லியில் மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் நீண்ட நாட்களாக காலாவதியான சுங்கச்சாவடிகள் அகற்றப்படாமல் தொடர்ந்து, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே உடனடியாக காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். மேம்பாலம் கட்டும் பணிகள் மேற்கொண்டுள்ள பகுதிகளில், சுங்கக் கட்டணம் வசூல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழகத்தில், பல பகுதிகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படும் வழக்குகளால், லாரி மற்றும் பிற வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த ஆன்லைன் வழக்குப்பதிவு செய்யும் முறையை ரத்து செய்து, லாரி உரிமையாளர்களைப் பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் பல பகுதிகளுக்கு செல்லும் தமிழக லாரிகளில் நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி கொள்ளைகள் நடைபெறுகிறது.

அவற்றை தடுக்க அந்தந்த மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதிப்படுத்துவதுடன், லாரி மற்றும் டிரைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில், கருங்கல்பாளையம், கீரம்பூர், பரமத்தி, பரமத்தி வேலூர்ர் பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொண்டு வரும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும், நாமக்கல் சட்டசபைக்கு உட்பட்ட, புதுச்சத்திரம், பொம்மைகுட்டைமேடு, பெருமாள்கோவில்மேடு ஆகிய பகுதிகளில், புதியதாக மேம்பாலம் அமைக்கவும், சங்ககிரியில் இணைப்பு சாலை மற்றும் காக்காபாளையம் பகுதியில் சுரங்க வழி நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top