Close
டிசம்பர் 4, 2024 6:46 மணி

திருவண்ணாமலையில் துணை முதல்வர் ஆய்வு

நிவாரண பொருட்களை வழங்கிய துணை முதல்வர்

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

மண் சரிவில் வீடு புதையுண்ட இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் மலைஅடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை  திடீரென மண் சரிவு ஏற்பட்டது. தகவலறிந்த போலீஸாா், தீயணைப்புத் துறையினா் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கௌதம், உறவினர்கள் மகா, தேவிகா, விநோதினி உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

இந்த நிலையில், மாலை 8 மணி நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.  மீட்புப்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

துணை முதல்வர்

இந்த நிலையில்,  இரவு திருவண்ணாமலையில் மண் சரிவு நிகழ்ந்துள்ள சம்பவ இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு உறவுகளை இழந்து வாடும் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அவர், மீட்புப்பணி குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

எப்படியாவது நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் திருவண்ணாமலையில் உண்மையில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. எஞ்சிய மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாறை மண் சரிவால் இறந்த ஏழு பேர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.   அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து வஉசி நகரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருமண மண்டபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, சிறப்பு கண்காணிப்பு அலுவலர்  மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாநகர மேயர் நிர்மலா வேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணைத்தலைவர் கருணாநிதி,சட்டமன்ற உறுப்பினர் கிரி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட துணை முதல்வர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top