Close
டிசம்பர் 5, 2024 1:34 காலை

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கால் தரைப்பாலம் சேதம்: போக்குவரத்து பாதிப்பு

சேதமடைந்த தரைப்பாலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பெஞ்சல் புயலால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. ஒரு பக்கம், புயல் கரையை கடந்தாலும் மறுபுறம் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல பகுதிகள் தத்தளித்துக் கொண்டுள்ளன.

ஜவ்வாது மலையிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா நதி அணையில் இருந்து செய்யாறு, செண்பகத்தோப்பு அணையில் இருந்து கமண்டல நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மிருகண்டா அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.

இதனால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள நீரால் ஓதலவாடி பகுதியில் உள்ள தரைப்பாலம் சேதமடைந்து துண்டிக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் உள்ள சதுப்பேரி, சதுப்பேரி பாளையம், கூடலூா், மடவிளாகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் 20 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

செய்யாறு வட்டம், பில்லாந்தி பகுதியில் ஓடும் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண திரண்ட மக்கள்

இதனால், பாதுகாப்பு கருதி ஆரணி – வந்தவாசி சாலை மூடப்பட்டு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

செய்யாற்றின் குறுக்கே ஆவணியாபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு திறக்கப்படவில்லை. இதனால், அணைக்கட்டு கரை பகுதியில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக தண்ணீர் வெளியேறி, வந்தவாசி – ஆரணி சாலையை சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மாற்று வழி தடத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டன. அணைக்கட்டில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதும், வந்தவாசி – ஆரணி சாலையில் மழைநீர் வடித்து போக்குவரத்து சீரானது.

ஆரணி அருகே முனுகப்பட்டு என்ற இடத்தில் செய்யாற்றுடன் கமண்டல நாக நதியும் இணைந்ததால், செய்யாற்றில் வெள்ள பெருக்கு அதிகரித்தது. செய்யாற்றில் விநாடிக்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றுள்ளது. செய்யாறு மற்றும் ஆவணியாபுரம் அணைக்கட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை காண மக்கள் திரண்டனர். செய்யாறு பாலம் மற்றும் அணைக்கட்டு பகுதியில் தண்ணீருடன் தங்களையும் இணைத்து செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர். நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் மக்கள் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தி காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

செய்யாறு வருவாய்த் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளை சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வட்டாட்சியா் வெங்கடேசன், துணை வட்டாட்சியா் ராஜேஷ், வாழ்குடை வருவாய் ஆய்வாளா் சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா் கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top