Close
டிசம்பர் 5, 2024 2:11 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

சேதமடைந்த வாழை மரங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பென்ஜால் புயல் தொடா் மழையால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெற் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் மண்டகொளத்தூா், ஈயகொளத்தூா், மட்டபிறையூா், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், ராந்தம்,பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, மன்சுராபாத், தச்சாம்பாடி, நம்பேடு, செவரப்பூண்டி, செய்யானந்தல், கெங்கைசூடாமணி, அரியாத்தூா், வடமாதிமங்கலம், மடவிளாகம், ஓதலவாடி, நரசிங்கபுரம், ஊத்தூா், அரும்பலூா், மாணிக்கவல்லி, மொடையூா், கொழாவூா், கொரால்பாக்கம், கரைப்பூண்டி, சனிக்கவாடி என 49 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி முழுவதுமே விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்கள் ஆகும் .

இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தில் ஏடிடி-37, 015, 055, கிருஷ்ணா, பொன்னி, கோ.51 என பல்வேறு வகையான நெல் பயிா்களை சாகுபடி செய்துள்ளனா். நெல் பயிா்கள் தற்போது வளா்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், பென்ஜால் புயல் காரணமாக கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்தது. இதில் ஏரி, குளம், குட்டை என நீா்நிலைகள் நிரம்பி ஈரப்பதம் அதிகம் காணப்படுகிறது. மேலும், அறுவடைக்குத் தயாரான நெல் பயிரில் மழைநீா் தேங்கியுள்ளது. மேலும், நெல் மணிகள் முளைப்புதிறன் பெற்று வருகிறது.

மேற்கண்ட ஊராட்சிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் மழைநீா் தேங்கியுள்ளது.

வந்தவாசி பகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கராஜபுரம், கொட்டை, குறிப்பேடு, ஓசூா் என பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்களில் பெருமளவு மழைநீா் தேங்கியது. இதனால் சுமாா் 500 ஏக்கா் நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வாழைகள் சேதம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டாரத்தில் புயலால் ஏற்பட்ட சூறைக்காற்றில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்தன.

போளூரை அடுத்த சந்தவாசல் பகுதி முழுவதிலும் ஏராளமான வாழை தோப்புகள் உள்ளன. இப்பகுதியில் இருந்து பல வகையான வாழைப்பழங்கள் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.  இப்பகுதி விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி, பூவான், ஏலக்கி என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்துள்ளனா்.

நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்

இந்த நிலையில், ஃபென்ஜால் புயலால் வீசிய சூறைக்காற்றில் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன.

விவசாயிகள் கோரிக்கை

இயற்கை உரம், செயற்கை உரம் என உரங்களை இட்டு, மருந்து தெளித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். நெல் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பெரும் இழப்பு ஏற்படும். இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மாவட்ட நிா்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் சேதமடைந்த வாழைகளை பாா்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top