Close
டிசம்பர் 4, 2024 7:07 மணி

திருவண்ணாமலையில் மலை மீது ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை

திருவண்ணாமலை மலை மீது ஐஐடி குழுவினர் ஆய்வு நடத்தினர்.

திருவண்ணாமலையில் அமைந்துள்ள மலை மீது ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை நடத்தினர்.

புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. திருவண்ணாமலையிலும் பலத்த மழை கொட்டியது. நேற்றுமுன்தினம், மலையிலிருந்து, ராட்சத பாறை ஒன்று அடிவாரத்திலுள்ள வஉசிநகர் பகுதியில் விழுந்தது. குடியிருப்புகளுக்கு மேலேயே ராட்சச பாறைகள் விழுந்ததால், வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிட்டன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில், அங்கு ஐஐடி குழுவினர் மண் பரிசோதனை செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற ஐஐடி நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் திருவண்ணாமலைக்கு நேரில் சென்று ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர். நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும், வீடுகள் கட்டப்பட்டிருக்கும் இடங்களிலும் மண்ணை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள், மண் சரிவு ஏற்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, மீட்புப் பணிகளுக்கு முக்கியமான ஆலோசனைகளை வழங்கினர். மலைக்கு அருகே கட்டுவோர், உரிய பொறியாளர்களிடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெற்றபிறகே வீடுகள் கட்ட வேண்டும் என்றும், மண் பரிசோதனை ஆய்வறிக்கை தமிழக அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் மண் பரிசோதனை குழுவினர் கூறினர்.

2668 அடி உயர மலை

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் மகா தீபம் ஏற்றும் 2668 அடி உயரமாகும். திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மலையடிவாரத்திலிருந்து படிப்படியாக மலை மீது பலர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி உள்ளனர்.

சட்ட விரோதமாக கிரிவலப் பாதை மற்றும் மலை மீது இருபுறமும் கட்டப்பட்டுள்ளது, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கிரிவலப் பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இரண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top