சென்னையில் மழை பாதிப்புகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பொது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் திருவண்ணாமலையில் மண் சரிவு குறித்து, தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெஞ்சல் புயல் சேதத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் அவதூறு கருத்துக்களை வீசுகின்றனர். சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு கொடுத்து படிப்படியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் தீபத் திருவிழா உற்சவம் தொடங்கிவிட்டது. கிரிவலப் பாதை மற்றும் மலைப் பாதை பாதிப்புகளை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை ஒருங்கிணைந்த அலுவல் பாதிப்புகள் இருப்பின் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிரிவலப் பாதையில் சேதம் இருந்தால் 2 நாட்களில் சரிசெய்யப்படும்
மேலும் அடுத்த சில நாட்களில் தீப திருவிழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறேன். ஏற்கனவே துணை முதல்வர் உள்ளிட்டோர் நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டனர். எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாலும் கடந்த ஆண்டைவிட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து வருங்காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.