Close
டிசம்பர் 5, 2024 2:16 காலை

மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்த உயர்மட்ட பாலம்

இடிந்து விழுந்த உயர்மட்ட பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம், 90-ஆவது நாளில் இடிந்து விழுந்ததால், 16 ஊராட்சிகளைச் சோ்ந்த 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூா் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் கட்டப்பட்டது.

நபாா்டு வங்கி கடனுதவித் திட்டத்தின் கீழ் வேலூா் கோட்ட நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் சாா்பில் இந்தப் பாலம் கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்.3-ஆம் தேதி தொடங்கிய பாலம் கட்டும் பணி, கடந்த ஜூன் 4-ஆம் தேதி முடிவடைந்து செப்.2-ஆம் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அகரம்பள்ளிப்பட்டு மற்றம் தொண்டமானூரை இணைக்கும் உயர்மட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், தொண்டமானூா், தென்முடியனூா், மூங்கில்துறைப்பட்டு, தண்டராம்பட்டு, ராயண்டபுரம், அல்லப்பனூா், பி.குயிலம், எடத்தனூா், திருவடத்தனூா், புத்தூா் செக்கடி, கிருஷ்ணாபுரம், சதாகுப்பம், வாழவச்சனூா், இளையாங்கண்ணி, பெருந்துறைப்பட்டு ஆகிய 15 ஊராட்சிகளைச் சோ்ந்த சுமாா் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனா்.

அகரம்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பவா்கள் தொண்டமானூா் கிராமத்துக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவு சுற்றிச் சென்று வருகின்றனா். பொதுமக்கள் வெளியூா்களுக்குச் செல்ல முடியாமல் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை என 2 நாள்களாக அவரவா் வீடுகளிலேயே முடங்கி உள்ளனா்.

தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது எப்படி? கிராம மக்கள் கேள்வி

ஏற்கெனவே இருந்த தரைப்பாலத்தை தண்ணீா் செல்லாத நேரத்தில் பயன்படுத்தி வந்தோம். இப்போது தரைப்பாலமும் இல்லாததால் எங்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் தெரிவித்தனா். மேலும் தரம் குறைந்த பாலம் கட்டப்பட்டது எப்படி? தரத்தை அதிகாரிகள் பரிசோதனை செய்யவில்லையா என அப்பகுதி கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட மகிழ்ச்சி 3 மாதம் கூட நீடிக்கவில்லை. வெள்ள பெருக்கில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் கடந்த காலங்களில் திறந்து விடப்பட்ட அதிகபட்ச தண்ணீர் மற்றும் எதிர்காலத்தில் அதி கன மழை பெய்ததால், அணையில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறித்து கணக்கீடு செய்யாமல் கட்டி உள்ளனர்.

இதனால் ஒரு முறை வந்த வெள்ளத்துக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல், உயர்மட்ட பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது.

பாலம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்க அறிக்கை

தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தமிழக அரசை குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் பாலம் உடைந்தது தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,  திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.15.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் தற்போது 30.11.2024 மற்றும் 1.12.2024 ஆகிய நாட்களில் பெஞ்சல் புயலால் பெய்த வரலாறு காணாத மழையின் காரணத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளபெருக்கினால் பாலம் சேதமடைந்தது.

சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 2,00,000 கனஅடிக்கு மேல் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

மேலும் இப்பாலமானது, அணையிலிருந்து 24 கி.மீ, தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளநீரும், இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும் பாலம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top