Close
டிசம்பர் 5, 2024 2:30 காலை

நாமக்கல்லிருந்து விழுப்புரத்திற்கு வெள்ள நிவாரணப் பொருட்கள்: எம்எல்ஏ அனுப்பி வைப்பு

நாமக்கல்லில் இருந்து, விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் கொõண்டு செல்லும் லாரியை, எம்எல்ஏ ராமலிங்கம் கொடியசைத்து துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் உமா, மாநகர மேயர் கலாநிதி ஆகியோர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பிலான, வெள்ள நிவாரணப் பொருட்கள் விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்காக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆபீசில் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

நாமக்கல் மாநகர மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் லாரியை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பெஞ்சல் புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

மேலும் டிசம்பர் 1 ஆம் தேதி பெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழையால் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனைத்தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் உமா மேற்பார்வையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ. 11.45 லட்சம் மதிப்பில் அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, மளிகைப் பொருட்கள், பால் பவுடர், பாய், போர்வை, நைட்டி, லுங்கி, நாப்கின்கள், பெட்ஷீட், தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான நிவராண பொருட்கள் 2 லாரிகளில் சேகரிக்கப்பட்டன. அவற்றை விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நிகழ்ச்சியில் டிஆர்ஓ சுமன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர்பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top