நாமக்கல் :
பங்களாதேஷ் நாட்டில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்களை கண்டித்து, நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 118 பாஜவினரை போலீசார் கைது செய்தனர்.
பங்களாதேஷ் நாட்டில், இந்துக்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜ சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை வகித்தனர். பங்களாதேஷில் 2024 ஆகஸ்ட் மாதம் புதிய அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, அங்கு ஏற்பட்டு உள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக, இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.
அங்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச் செயல்கள் நடைபெற்றுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. இந்துக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில், இஸ்கான் அமைப்பை சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி பாடல்களைப் பாடினார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை சேர்ந்த பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட 118 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்துச்சென்றனர்.