பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா இன்று 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் தீபத் திருவிழா நடைபெறும்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ‘மலையே மகேசன்’ என போற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையின் உச்சியில் வரும் 13-ம்தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சி கொடுப்பார். வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர், தீப மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருவார்.
10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் பலர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்குவது வழக்கம்.
கார்த்திகை தீபத் திருவிழாவை தொடர்ந்து மறுநாள் (டிச.14-ம் தேதி) பவுர்ணமியும் வருகிறது. இவ்விழாவுக்கு சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கணித்துள்ளன. இவர்களில், ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்களின் வருகையும் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாநகரம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள தங்கும் விடுதிகளில் அறைகளின் புக்கிங் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
தற்போது தீபத்திருவிழா நெருங்கி விட்டதால் விடுதிகளில் அறைகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. தங்கும் அறைகளுக்கு கடும்போட்டி நிலவுவதால் வாடகையும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் 30 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக விடுதிகள் மீது பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
3 நாள் பேக்கேஜ்
தங்கும் விடுதி அறைகளின் நிலைக்கு ஏற்ப, ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் என கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் அறை கிடைத்தால் போதும் என வெளிமாநில செல்வந்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் புக்கிங் செய்வதாகவும் இதனால் சாமானிய பக்தர்களுக்கு விடுதிகளில் அறைகள் கிடைப்பதில்லை என்றும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
சூப்பர் ஆஃபர்
அதாவது ஒரு சில விடுதிகளில் இந்த ஆஃபரில் ரூம் எடுத்து தங்கினாள் உங்களுக்கு பரணி தீபம் மற்றும் மகா தீபத்திற்கு கோவிலுக்குள் செல்ல பாஸ் நாங்கள் வாங்கித் தருகிறோம் எனக் கூறி சில புரோக்கர்கள் சுற்றி வருவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள புகழ் பெற்ற ஆசிரமங்களில் திருவிழாவின்போது எந்தவிதமான கூடுதல் கட்டணங்களும் வசூலிப்பதில்லை. அங்கு ஆசிரம உபயதாரர்களுக்கு அறைகளை ஒதுக்கி விடுவதால் அங்கு கிடைப்பது மிகவும் கடினம்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதிகள் இல்லை. சுற்றுலா துறை சார்பில் யாத்ரி நிவாஸ் விடுதி மட்டும் உள்ளது. இந்த விடுதியிலும், தீபத்திருவிழா ஏற்பாடுகளுக்காக அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அதிகாரிகள் தங்குகின்றனர்.
விடுதி உரிமையாளர்கள் கேட்கும் கட்டணத்தை, வசதியானவர்கள் கொடுத்து விடுகின்றனர். பல நூறு கி.மீ., தொலைவு பயணம் செய்து வரும் நடுத்தர பக்தர்களாகிய, எங்களால் கொடுக்க முடியாது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
பக்தர்களின் புகார்கள் குறித்து தங்கும் விடுதி நிர்வாகிகள் தரப்பில் தெரிவித்ததாவது
எந்த பக்தர்களும் பொதுமக்களும் அவர்கள் விரும்பிய, தகுதிக்கு ஏற்றார் போல் விடுதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். சிலர் கூறுவது போல் அதிக கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
மேலும் தீப டிக்கெட் வழங்குவதாக கூறுவது முற்றிலும் பொய். அதனை யாரும் நம்ப வேண்டாம். திருவண்ணாமலையில் எந்த விடுதிகளிலும் அவ்வாறு பாஸ் வாங்கி தருகிறோம் என கூறுவதும் இல்லை, அறைகளுக்கான கட்டணத்தை மட்டும் தெரிவித்து புக்கிங் செய்து வருகின்றோம் என தெரிவித்தனர்.