நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசின் வாடகையின் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்பபெறவேண்டும், வணிக லைசென் கட்டணம் உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவேண்டும். டிராய் விதிமுறைகளை மீறி ரோடு ஓரங்களில் குடைகள் அமைத்து செல்போன் சிம் கார்டு விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும், என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, நாமக்கல்லில் வருகிற 11ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணை தலைவர்கள் செல்வராஜ், சுப்பிரமணியம், சங்கர் மற்றும் மாநில இணை செயலாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட செயலாளர் வீரக்குமார் வரவேற்கிறார். மாநில மூத்த துணை தலைவர் பெரியசாமி கேரிக்கைகளை விளக்கி பேசுகிறார். மாவட்ட பொருளாளர் சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடைபெறவிருக்கும், இந்த ஆர்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரமைப்பின் 46 இணைப்பு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்களும் வணிகர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.