திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாநகர பகுதியில் ஆட்டோக்களை முறைப்படுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா சமயத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகர பகுதியில் இயக்க உரிய ஆவணங்கள் உள்ள ஆட்டோக்களுக்கு இந்த ஆண்டு கியூ ஆர் கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் ஆட்டோ ஓட்டுனர் பெயர் முகவரி ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தீபத்திருவிழாவின் போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து முதுநிலை வாகன ஆய்வாளர் பெரியசாமி ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபார்த்தார்.
இதில் 800க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டு தங்கள் வாகனங்களில் ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக 700 ம் மேற்பட்ட ஆட்டோக்களின் வாகனங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த சரி பார்க்கும் பணி வருகிற டிசம்பர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது என வட்டாரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.