தீபத் திருவிழாவில் அண்ணாமலையார் திருவீதியுலாவின் போது மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க , அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து காலை 10 மணி அளவில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர் ,பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி உற்சவர்கள் தனித்தனி விமானங்களில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை 10 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகர் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இந்நிலையில் கோயிலுக்கு முன் உள்ள 16 கால் மண்டபம், தேரடி வீதி மற்றும் மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தொலைவிலிருந்து சுவாமி வீதியுலா வருவதை காண வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களுடைய இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுவாமி எதிரே வரும்போது இவர்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிலும் குறிப்பாக பேகோபுரதெரு, பெரிய தெருவில் சுவாமி வீதியுலா வரும் போது எதிர் திசையில் இரு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் தங்களது செல்போன்களில் அதனை வீடியோ எடுப்பதற்காக மெதுவாக செல்லும்போது பின்வருபவர்கள் மிகவும் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .
சுவாமி மாட வீதியில் வலம் வரும் சமயத்தில் மட்டும் மாட வீதியில் போக்குவரத்தை தடை செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.