தென்காசியில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.71.46 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் இன்று வழங்கினார்.
தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆணையத் துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் வரவேற்று பேசினார்.
விழாவில் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் சே. ச. பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் 82 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, தொழில் துவங்க உதவித் தொகை, இலவச தையல் இயந்திரம், டாம்கோ கடன், உபதேசியர் நலவாரிய உறுப்பினர் அட்டைகள் என மொத்தம் ரூ. 71.46 லட்ச மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியின் போது சிறுபான்மை ஆணையத் தலைவர் அருண் கூறியதாவது:-
டிசம்பர் 25-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் சென்று சிறுபான்மையினர் நல ஆணையத்தின் கூட்டம் நடத்தி முடிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகிறோம்.
தென்காசி மாவட்டத்தில் கல்லறைத் தோட்டம் அமைப்பது, செயல்பட்டு வரும் கல்லறை தோட்டங்களுக்கு சுற்றுச் சுவர் அமைப்பது என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தென்காசி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு என்று அரசு கல்லூரி இல்லாத நிலையில் 20 ஏக்கர் இடத்தை அரசுக்கு வழங்க இருப்பதாகவும் அதில் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை ரூ.2 கோடிக்கு மேல் சிறுபான்மை துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.சிறுபான்மை இன மக்களின் நலனுக்காக தமிழக முதல் வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா ஸ்தலமான குற்றாலம் இருப்பதால் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற வகையில் குப்பைகள் இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் அரசு கூடுதல் செயலர் சுரேஷ்குமார், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.