Close
ஏப்ரல் 3, 2025 12:32 மணி

தென்காசி மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற பணியாளர்கள்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கோப்பு படம்)

தென்காசி மாவட்டம், தெற்குமேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து  ஒன்றில் படுகாயம் அடைந்த நிலையில், தனக்கு உரிய இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விபத்து ஏற்படுத்திய செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய வாகனம் மற்றும் கூடுதலாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வாகன விபத்து வழக்கில் சேர்த்து, மனுதாரருக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தென்காசி முதன்மை நீதிமன்ற நீதிபதி மாரீஸ்வரி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த நிலையில், ரூ.14 லட்சம் பணம் நீண்ட காலமாக  மனுதாரருக்கு செலுத்தாமல் இருந்து வந்த நிலையில், இத்தனை வருடத்திற்கு மொத்தம் ரூ.8 லட்சம் வட்டி சேர்த்து ரூ.22 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், மனுதாரருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை ரூ. 19 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.3 லட்சம் பணம் நீண்ட நாட்களாக கொடுக்கப்படாத நிலையில், தற்போது ரூ.3 லட்சத்திற்கும் வட்டியுடன் சேர்த்து மொத்த தொகை ரூ.4,31,648 செலுத்த வேண்டும் எனவும், இல்லையெனில் மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை ஜப்தி செய்யும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து  நீதிமன்ற பணியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் வாகனம், ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர், ஏசி மிஷின்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவைகளை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஜப்தி  செய்வதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top