தென்காசி மாவட்டம் கடையத்தில், 84 கன அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணையினை பிசான சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்.
தென்காசி மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி அருகே ராமநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேகத்தின் மூலம் வடகால், தென்கால், பாப்பன்கால், புதுக்கால் ஆகிய கால்வாய்களின் மூலம் 4943.51 ஏக்கர் விலை நிலங்களும், தெற்கு கடையம், மேலக்கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைகுளம், பொட்டல்புதூர், துப்பாக்குடி உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 33 குளங்கள் பயன் பெறுகின்றன. இந்த அணையில் இருந்து இன்று பிசான சாகுபடிக்காக தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நீரினை திறந்து விட்டார்.
இன்று திறக்கப்படும் தண்ணீர் வரும் 31.3.2025 வரை 117 நாட்களுக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையினால் மேலும் அணையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பருவமழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப்பெறவில்லை என்றால் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும் நீர்நிலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.