Close
டிசம்பர் 12, 2024 10:30 காலை

புதுக்கோட்டையில்  சோலார் விளக்கு வாங்கியதில் ஊழல்..! வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு..!

சோலார் மின் விளக்குகள் -கோப்பு படம்

அதிமுக ஆட்சியின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ‘சோலார்’ விளக்குகள் வாங்கியதில் 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பி.டி.ஓ) உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(53). இவரது அண்ணன் ரவிச்சந்திரன்(55), தம்பி பழனிவேல்(50). இவர்களில் பழனிவேல் என்பவர் அதிமுக மாவட்ட இளைஞர் அணி செயலராக இருக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது 2019 – 2020ம் ஆண்டுகளில் இம்மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, குன்னாண்டார்கோவில், திருமயம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், தெருவிளக்கு கம்பங்களில் பொருத்துவதற்காக சோலார் மின் விளக்குகள் வாங்கப்பட்டன. அவ்வாறு சோலார் மின் விளக்குகள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் அந்தத் துறையின் டி.எஸ்.பி., மாயவரம்பன் புகார் அளித்துள்ளார். இந்த ஊழல் குறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ் மற்றும் முருகானந்தம் மனைவி காந்திமதி நடத்தி வரும் வீரா ஏஜென்சி, ஷேக் அப்துல்லா நடத்தி வரும் ஹெச்.எஸ்.பி. ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சோலார் விளக்குகள் வாங்கப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்தது.

அதாவது 30 வாட்ஸ் ஒரு சோலார் விளக்கு 10,952 ரூபாய் ஆகும். ஆனால் அந்த குறைந்த விலைக்குப் பதிலாக 59,900 ரூபாய் விலை நிர்ணயத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

அதன்படி கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு காந்திமதி, ஷேக் அப்துல்லா நிறுவனங்களிடம் இருந்து 72 சோலார் விளக்குகள் 43 லட்சத்து 55,928 ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது வாங்கப்பட்டுள்ளன.

இப்படி, எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 799 சோலார் விளக்குகள் அதிக விலை கொடுத்து வாங்கி, 3.72 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அதிக விலை கொடுத்து சோலார் விளக்குகளை வாங்குவதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பிடிஓ) உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பழனிவேல், காந்திமதி, ஷேக் அப்துல்லா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களான அறந்தாங்கி சிவகாமி, அரிமளம் ஆயிஷாராணி, கறம்பக்குடி ரவி, திருமயம் சங்கர், கந்தர்வக்கோட்டை அரசமணி, மணமேல்குடி ரவிச்சந்திரன், குன்னாண்டார்கோவில் கலைச்செல்வி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பாளர் அசோகன் என்று மொத்தமாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top