நாமக்கல் :
சேந்தமங்கலம் அருகே ஏரி நிரம்பி வழிந்து வீணாகும் நீரைத் தடுத்து, சின்ன ஏரிக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்டம் சிவநாய்க்கன்பட்டி, பழையபாளையம், சாலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த, ஏரி பராமரிப்புக்குழுவினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா, பழையபாளையம் மற்றும் சிவநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில், சின்ன ஏரி, பெரிய ஏரி ஆகிய 2 ஏரிகள் உள்ளன. இந்த ஏரியின் மூலம் 750 ஏக்கர் ஆயக்கட்டு விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், இப்பகுதியில் உள்ள 3 பஞ்சாயத்து பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களுக்கான குடிநீர் தேவைக்கு இந்த ஏரிகள் ஆதாரமாக உள்ளத. குறிப்பாக சின்ன ஏரியில் தண்ணீர் இருந்தால் தான் பழையபாளையம் கிராமத்திற்கு போதிய குடிநீர் வசதி கிடைக்கும்.
மழை காலத்தில் கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணீர் காரவள்ளி வழியாக வரும்போது, வரும் வழியில் உள்ள ஏரிகள் நிரம்பி முத்துக்காப்பட்டி பகுதியில் உள்ள பாப்பான் குளம் ஏரி நிரம்பி, இறுதியாக பழையபாளையம் பெரிய ஏரிக்கு நீர் வந்து சேரும்.
பெரிய ஏரியில் இருந்து வளியும் நீர், அடுத்துள்ள பழைய பாளையத்தை ஒட்டியுள்ள சிவநாயக்கன்பட்டியில் உள்ள சின்ன ஏரிக்கு வந்து சேரும். இந்த 2 ஏரிகளும் ஒரே நேரத்தில் நிரம்பி இரண்டு ஏரிக்கு உட்பட்ட நான்கு கடகால் பகுதி வழியாக உரிர் நீர் வெளியேறி கருவாட்டு ஆற்றின் வழியாக தூசூர் ஏரியை சென்றடையும்.
ஆனால் தற்போது கொல்லிமலை காரவள்ளி பகுதியில் பெய்த மழை நீர் பெரிய ஏரிக்கு வந்தடைந்து, சின்ன ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகமான நீர் பெரிய ஏரியில் உள்ள நீலக்கடகால் பகுதி வழியாக சின்ன ஏரிக்கு வராமல் வெளியே செல்கிறது.
இதனால் சின்ன ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளது இந்த இரண்டு ஏரிகளும் கட்டப்பட்ட பலநூறாண்டு காலம் ஆகிறது. ஆரம்ப காலம் முதல் 2 ஏரிகளும் ஒரே நேரத்தில்தான் நீர் நிரம்பி, ஒரே நேரத்தில்தான் உபரி நீர் வெளியேறும் படி நீர்மட்டம் முறைப்படுத்தப்பட்டு ஏரிக்கரையை கட்டி வடிவமைத்து உள்ளனர்.
பெரிய ஏரியில் நீலக்கடகால் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மூலமாக பாலம் கட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை ஏரி நிரம்பியது. அப்போதும் 2 ஏரிகளும் ஒரே நேரத்தில்தான் நீர் நிரம்பி வெளியேறியது.
ஆனால் இந்த முறை, சின்ன ஏரி நிரம்பாமல், பெரிய ஏரிக்கு உட்பட்ட, நீலக்கடகால் பகுதியில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறுகிறது. எனவே உடனடியாக பெரிய ஏரியின் நீலக் கடகால் பகுதியை சீரமைத்து, சின்ன ஏரிக்கு முறையாக நீர்வரத்து வந்து, அந்த ஏரி நிரம்பி, 2 ஏரிகளில் இருந்தும் வழக்கம் போல ஒரே நேரத்தில், உபரி நீர் வழிந்தோடும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.