நாமக்கல்:
திருச்செங்கோட்டில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் உமா கலந்துகொண்டு 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டம் தொடக்க விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தர். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 2,807 பயனாளிகளுக்கு ரூ.7.61 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய ஆட்சியர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகின்றார். தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ரூ. 5 லட்சம் வரை விபத்து இன்சூரன்ஸ் திட்டம், ரூ. 1 லட்சம் வரை பணியிடத்து விபத்து இன்சூரன்ஸ் திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
மேலும், இன்று அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு திருச்செங்கோடு தாலுகாவில் மட்டும் 2,807 பயனாளிக்கு சுமார் ரூ.7.61 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதேபோல் நாளை ராசிபுரத்தில் சுமார் 4,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 3.50 லட்சம் தூய்மைப் பணியாளர்கள் தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவுசெய்துள்ளார்கள். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 95 சதவிகிதம் தூய்மைப் பணியாளர்கள், சுமார் 3,500 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, மாநிலத்தில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் நளினி சுரேஷ்பாபு, துணைத்தலைவர் கார்த்திகேயன், டிஆர்ஓ சுமன், ஆர்டிஓ சுகந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.