திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை பூத வாகனத்திலும் , நேற்று இரவு சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா
புதன்கிழமை 4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.
அதன்படி, தீபத் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை பூத வாகனத்திலும் , நேற்று இரவு சிம்ம வாகனத்திலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அருணாச்சலேஸ்வரர், மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, அன்னவாகனத்தில் பராசக்தி அம்மன், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மாடவீதிகளில் வளம் வந்தனர். உற்சவர் சுவாமிகளை வழிநெடுங்கிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
தீபத் திருவிழாவில் இன்று..
தீபத் திருவிழாவின் 4-ஆவது நாளான இன்று காலை அருணாச்சலேஸ்வரர் நாக வாகனத்திலும், இரவு கற்பக விருட்சத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி அருள்பாலிப்பர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.
