Close
டிசம்பர் 12, 2024 7:50 காலை

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

அன்னதானம் வழங்க அனுமதி ஆணையினை வழங்கிய ஆட்சியர்

தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்குவோா் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியைப் பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதுடன், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா, டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவில் கிரிவலம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அவ்வாறு அன்னதானம் வழங்குவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து முன்அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை சாா்பில் திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.

தமிழக உணவு பாதுகாப்புத் துறையின் கூடுதல் ஆணையா் தேவபிரசாத், உணவு பாதுகாப்புத் துறையின் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலா் ஏ.ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அன்னதானம் வழங்க விண்ணப்பித்த நபா்களுக்கு அனுமதி ஆணையை  வழங்கிப் பேசியதாவது:

அன்னதானம் வழங்குவோா் வாழை இலை, பாக்கு மட்டைத் தட்டு, மந்தாரை இலை ஆகியவற்றை பயன்படுத்தலாம். உணவு சமைக்க தூய்மையான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தூய்மையான, தரமான பொருள்களை பயன்படுத்தி உணவு சமைத்து வழங்க வேண்டும்.

தரமான உணவுப் பொருட்களை கொண்டு உணவு வழங்கினால் தான் மனம் மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அன்னதானம் வழங்குவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். மீறி பயன்படுத்துவோா் மீது அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும்.

வாழை இலை, பாக்குமட்டை, மந்தாரை இலை பயன்படுத்த வேண்டும்.பக்தர்களின் தேவை அறிந்து உணவை வழங்க வேண்டும். அப்போதுதான், உணவு வீணாகாமல் முழுமையாக பயன்படுத்தப்படும்.

அன்னதானம் வழங்கும் இடத்தில், குப்பை கழிவுகளை முறையாக குவித்து வைத்தால், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் சுத்தம் செய்து கொள்ளலாம். மேலும், உணவை கவனமாக சமைக்க வேண்டும். உணவு சமைப்பதற்கு தூய்மையான தண்ணீரை பயன்படுத்தவும். மேலும், உணவை தூய்மையாகவும், தரமான பொருட்களை கொண்டும் சமைத்து வழங்க வேண்டும். உணவில் நிறமிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் . உணவு பாதுகாப்பு துறை மூலம் அன்னதானத்தின் தரம் முறையாக பரிசோதிக்கப்படும். சமைத்த உணவை கண்ணாடி பாத்திரத்தில் சிறிது மாதிரிக்கு எடுத்துக் வைத்துக்கொள்ள வேண்டும்  என்றாா்.

நிகழ்ச்சியில், நலப் பணிகள் இணை இயக்குநா் பிரகாஷ் மற்றும் மருத்துவா்கள், அன்னதானம் வழங்குவோா், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top