Close
டிசம்பர் 12, 2024 5:01 காலை

பாலம் உடைந்து மக்கள் வரிப்பணம் வீண்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 90 நாள்களே ஆன நிலையில் சாத்தனூர் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பாலத்தைக் கட்டி மக்களின் பணத்தை வீணடித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே அகரம்பள்ளிப்பட்டு – தொண்டமானூர் இடையே தென்பெண்ணையாற்றில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேரில் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

டிசம்பர் 2 ஆம் தேதி திருவண்ணாமலை, தென்பெண்ணை ஆற்றில் 2 லட்சம் கன அடி நீர் சென்றது. இந்நிலையில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த புதிய பாலம் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டது. 16 கோடி ரூபாயில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டும்போதே நீர்வளத் துறை அதிகாரிகள் பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், பாலத்தில் தூண்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் கருத்து கூறியுள்ளனர்.

ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற நிலையில் பாலத்தைக் கட்டியுள்ளனர். முழுக்க முழுக்க அரசின் கவனக் குறைவால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து கடந்த 1972-ம் ஆண்டு, 2.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கு ஏற்ப, கட்டுமானப் பணியை வடிவமைத்து கட்டப்பட்டிருந்தால், பாலம் சேதமடைந்து இருக்காது.

அதிமுக ஆட்சியில் 7 பாலங்கள் உடைந்ததாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தவறான பொய்யான செய்தியை தெரிவித்துள்ளார். 7 பாலங்கள் உடைந்ததாக சொல்லிவிட்டு, 4 பாலங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார். இதுவும் உண்மையல்ல. விழுப்புரம் அடுத்த தளவானூரில் பாலம் உடைந்ததாக சொல்கிறார். இது பாலம் கிடையாது, தடுப்பணை. அதிமுக ஆட்சியர் கட்டப்பட்டது. இரு புறங்களில், மண்கரை அடித்து செல்லப்பட்டதால் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. தடுப்பணை அப்படியே உள்ளது. தடுப்பணை சேதமடையவில்லை என்றார்.

அதிமுக சாா்பில் நிதியுதவி

திருவண்ணாமலை மகா தீப மலையின் அடிவாரத்தில் உள்ள வ.உ.சி.நகா், 11-ஆவது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். இவா்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சாா்பில் தலா ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு 7 பேரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், தலா ரூ.ஒரு லட்சம்  நிதியையும் வழங்கினாா்.

இதில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, கிழக்கு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், மத்திய மாவட்டச் செயலா் ஜெயசுதா, ,முன்னாள் அமைச்சா்கள் முக்கூா் சுப்பிரமணியன், சேவூா் ராமச்சந்திரன்,  ஒன்றியச் செயலா் கலியபெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன்,திருவண்ணாமலை நகர அதிமுக செயலா் செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பழனிசாமி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top