எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பதாலும்,திமுகவின் பல மக்கள் நலத்திட்டங்களாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்
திமுக மாணவரணி சார்பில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாள் விழா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை 108 வது பிறந்த நாள் விழா ஆகியவற்றில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. திமுகவின் மக்கள் நலத் திட்டங்களாலும், பெண்களது ஆதரவு அதிகமாக இருப்பதாலும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது.
மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைப் போல திமுக வரவிருக்கும் பேரவைத் தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும்.
சட்டபேரவைத் தேர்தலில் தர்மபுரியில் சாதியும், கோவையில் மதமும் போட்டியிட்டன. இரு இடங்களிலும் சாதிக்கோ, மதத்துக்கோ மக்கள் வாக்களிக்கவில்லை. சாதி, மதம் பார்க்காமல் திமுகவுக்கு மக்கள் வாக்களித்தனர்.
திருத்தணி முருகனின் வேலை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் வலம் வந்தார் ஒருவர். ஆனால் வெற்றி பெற்றது திமுக தான். கடவுள் பக்தி என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்பதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்தக் கட்சிக்கும் இல்லாத எழுச்சி இப்போது திமுகவில் இருக்கிறது. இதற்கு காரணம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இன்னும் 50 ஆண்டுகளுக்கு கோட்டையில் கொடியை ஏற்றும் உரிமை திமுகவுக்காகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு வலிமை மிக்கவராக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என்று பேசினார்.