மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி கார்த்தி மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருதினைப் பெற்றுள்ளார்.
மஹிந்திரா டிராக்டர்ஸ் மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா விருது என்ற விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
மில்லியனர் ஃபார்மர் ஆஃப் இந்தியா (எம்எஃப்ஓஐ) விருதுகள் 2024 புது டெல்லியில் உள்ள புசாவில் உள்ள புகழ்பெற்ற ஐஏஆர்ஐ மைதானத்தில் தொடங்கியது. இந்த வரலாற்று நிகழ்வு முற்போக்கு விவசாயிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடுவதுடன் விவசாயத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிறது.
கிருஷி ஜாக்ரன் ஏற்பாடு செய்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) இணைந்து இந்த நிகழ்ச்சியினை நடத்துகிறது. மேலும் மஹிந்திரா டிராக்டர்ஸ் நிதியுதவியுடன், மூன்று நாள் நிகழ்வு நடக்கிறது.
விவசாயத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க உலகளாவிய தலைவர்கள், விவசாய முன்னோடிகள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்றிணைப்பதை இந்த நிகழ்ச்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் மதுக்கூர் வட்டாரம் அத்திவெட்டு கிராமத்தை சேர்ந்த முற்போக்கு இயற்கை விவசாயி இளைஞர் கார்த்தி விழா குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் 1ம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபலானி கையினால் விருது பெற்றுள்ளார்.
தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 17 விவசாயிகளில் டெல்டா பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இளம் விவசாயி கார்த்தி,விருது பெற்றதை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் நேற்று பாராட்டி சிறப்பித்தனர். இளம் விவசாயி கார்த்தி இயற்கை விவசாயத்தின் மூலம் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்து தெரிவித்தனர்.