நாமக்கல் :
கந்தம்பாளையம் அருகே நாட்டுக்கோழிப்பண்ணையில் தீப்பிடித்து 2 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.
நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அருணகிரிபாளையம் ஊஞ்சல்காட்டில் உள்ளது. அங்கு அவர் நாட்டுக் கோழிப்பண்ணை அமைத்து நடத்தி வருகிறார்.
அந்த பண்ணையில் சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவர் கோழிப்பண்ணைக்கு அருகில், ஆடுகளுக்காக, விறகு அடுப்பில் நெருப்பு மூட்டி கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தார்.
பின்னர் அடுப்பில் இருந்த நெருப்பை அணைக்காமல் வெளியில் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் அப்பகுதியில் வேகமாக காற்று வீசியது. அப்போது அடுப்பில் தீப்பற்றி, அந்த தீ அருகில் இருந்த கோழிப்பண்ணையின் கூரைக்கு பரவியது.
சிறிது நேரத்தில் கோழிப்பண்ணை முழுவதும் தீப்பறி எரியத் தொடங்கியது. தகவல் கிடைத்ததும் அங்கு வந்த முருகேசன், திருச்செங்கோடு தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.
அங்கு விரைந்த வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். இருப்பினும் பண்ணையில் இருந்த சுமார் 2 ஆயிரம் நாட்டுக்கோழிகள் தீயில் கருகி இறந்தன. இறந்த கோழிகள் மற்றும் பண்ணையின் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும் என தெரிகிறது. இது குறித்து, நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.