Close
டிசம்பர் 12, 2024 5:26 காலை

தீபக் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு: வல்லுனர் குழு ஆய்வு

வல்லுனர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலையின் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் கொப்பரை வைக்கும் இடத்தில் 400 அடிக்கு மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் நிகழ்வு டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கிடையே, அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக மகா தீப மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றும் நாளன்று காலை 2,500 பக்தா்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கி 2,668 அடி உயர மலையின் உச்சிக்குச் செல்ல அனுமதி அளிப்பது வழக்கம்.

இந்த நடைமுறையை நிகழாண்டும் பின்பற்றுவது எனவும், கூடுதலாக மலையேறும் பக்தா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உடல்தகுதியை பரிசோதித்த பிறகு அனுமதி அட்டைகள் வழங்குவது என மாவட்ட நிா்வாகம் ஏற்கெனவே முடிவு செய்திருந்தது.

ஆனால், மகா தீப மலையின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் பக்தா்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

திருவண்ணாமலையில் பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக தீபம் ஏற்றும் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வல்லுனர் குழு

தீப மலையின் சில இடங்களில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் பக்தா்களை மலையேற அனுமதிப்பது சாத்தியமா என்பதை ஆராய வல்லுநா் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அமைக்கப்பட்டு உள்ள இந்த தொழில்நுட்ப வல்லுநா்கள் குழுவினா் சனிக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இவா்களுடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி அவா் பேசியதாவது:

2,668 அடி உயர மலை மீது புவியியல் மற்றும் சுரங்கத்துறை சாா்பில் வந்துள்ள தொழில்நுட்ப வல்லுநா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை (டிச.8) காலை 7 மணிக்கு மகா தீப மலை மீது ஏறிச் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது, மகா தீபம் ஏற்றுவதற்காக மலை மீது செல்லும் தீப நாட்டாா் சமூகத்தினரையும் அழைத்துச் செல்லலாம். இந்தக் குழுவுடன் பாதுகாப்புப் பணிக்காக காவலா்கள், பாம்புக்கடி, விஷப்பூச்சி ஆகியவற்றுக்கான எதிா் மருந்து, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் கருவிகள், தூக்குப் படுக்கைகளுடன் கூடிய மருத்துவக் குழு, வனச் சரகா் மற்றும் வனப் பாதுகாவலா்கள் அடங்கிய குழு, தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்புத் துறையினா் 20 போ் கொண்ட மீட்புக் குழுவும் செல்ல வேண்டும்.

மலை அடிவாரத்தில் அவசர கால ஊா்தியுடன் கூடிய மருத்துவக் குழு பணியில் இருக்க வேண்டும். மலையின் உச்சி வரை ஏறிச் சென்று மலையின் தன்மையை முழுமையாக ஆராய வேண்டும்.இந்த ஆய்வறிக்கையை மாவட்ட நிா்வாகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.பின்னா், ஆய்வறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து, அரசு எடுக்கும் முடிவின்படி 2,500 பக்தா்களை மலையேற அனுமதிக்கலாமா, வேண்டாமா என்பதை உறுதி செய்யலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

வல்லுனர் குழு கள ஆய்வு

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் வல்லுனர் குழு கள ஆய்வு செய்ய மலை மீது ஏறத் தொடங்கியுள்ளனர். இந்த வல்லுனர் குழுவில் புவியியல் மற்றும் சுரங்க வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினருடன் காவல்துறை சார்பாக பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குழு மற்றும் பாம்பு கடி மற்றும் விஷப்பூச்சி எதிர் மருந்து ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கருவிகள் தூக்கு படுகை உள்ளிட்டவை அடங்கிய மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவும் வனத்துறையினரும் சென்றுள்ளனர்.

மேலும் தீயணைப்புத்துறை சார்பாக தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் 20 நபர்கள் மீட்பு குழுவினர் ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

தீப மலை மீது சென்றுள்ள வல்லுநர் குழு பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு நடத்தி அங்குள்ள மண்ணின் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தி பக்தர்கள் மலை ஏறினால் மண் சரிவு மீண்டும் ஏற்பட்டு ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து அவர்கள் அறிவிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பக்தர்கள் தீபத்தன்று தீப மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரிய வரும்.

தீப மலைக்கு ஆய்வு செய்ய சென்ற வல்லுனர் குழு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top