திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களை, தமிழக காங்கிரஸ் தலைவா் கே.செல்வப் பெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்
கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ.உ.சி. நகா், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேர் உயிரிழந்தனர்.
மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரை சனிக்கிழமை தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப் பெருந்தகை சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதியை அவா் பாா்வையிட்டாா்.
பிறகு, திருவண்ணாமலை நகராட்சி அமராவதி முருகையன் உயா்நிலைப் பள்ளி நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பொதுமக்களை அவா் சந்தித்து ஆறுதல் கூறி, நல உதவிகளை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த செல்வப் பெருந்தகை, மண் சரிந்த விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது. திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பேரிடர் ஏற்பட்டு பல்வேறு இழப்புகளை சந்தித்து இருக்கிறது.
குறிப்பாக திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுவதற்காக வருகின்ற சட்டப்பேரவையில் பேச உள்ளோம் இதற்கான தொலைநோக்கு திட்டம் விரிவாக விவரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்த மிகப்பெரிய பேரிடரை மத்திய அரசு துள்ளியமாக கணிக்க தவறிவிட்டது இனிவரும் காலங்களில் அனைத்து விஞ்ஞானபூர்வமான அதிநவீன கருவிகளை வைத்து நவீனப்படுத்தி துல்லியமாக கணிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிவாரணத் தொகையை வழங்குவதில் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. பாஜக ஆளும் மற்றும் பாஜகவின் ஆக்சிஜனாக இருக்கக்கூடிய ஆந்திரா பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிவாரணத் தொகையை அள்ளிக் கொடுப்பதோடு தமிழ்நாட்டை மாற்றான் தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சமீபத்தில் பேசியது குறித்த கேள்விக்கு, கட்சி தற்போது தான் ஆரம்பித்துள்ளார். களத்திற்கு வரவேண்டும். போகப்போக தான் அவருக்கு அரசியல் புரியும், பொது வாழ்க்கையில் பேசிவிட்டு செல்வது அல்ல அரசியல் என்றும் மக்கள்தான் யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.
1971 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலேயே மன்னர் ஆட்சிக்கு முடிவு வந்தது. வார்த்தைகளை அளந்து பேசுவதோடு புரிதல் இல்லாமல் பேசக்கூடாது என கூறினார்.
நிகழ்ச்சியில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செங்கம் குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.