என்இசிசி அறிவிக்கும் விலையை விட, முட்டை வியாபாரிகள் பண்ணைகளில் விலை குறைத்து கொள்முதல் செய்வதை தடுக்க, நாளை முதல் முட்டை வியாபாரிகள் சங்கம் மூலம் முட்டை விலை அறிவிக்கப்படும் என என்இசிசி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
என் முட்டை என் விலை என்ற நோக்கத்தை மையமாக வைத்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு மறைந்த அதன் தேசிய தலைவர் பி.வி.ராவ் மூலம் துவக்கப்பட்டது. இதன் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளது. தற்போது, தினசரி பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலையை இந்த அமைப்பு அறிவித்து வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (என்இசிசி), அவசர நிர்வாகக்குழு கூட்டம் அதன்தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் என்இசிசி நாமக்கல் மண்டல மற்றும் வட்டார நிர்வாகிகள், முட்டை விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் முட்டை வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்தியா முழுவதும் முட்டை விற்பனை நன்றாக இருந்தும் என்இசிசி சிபாரிசு செய்யும் பண்ணைக் கொள்முதல் விலைக்கும் வியாபாரிகள் பண்ணையாளரிடம் வாங்கும் விலைக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாக உள்ளது, இதை தடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
என்இசிசி சிபாரிசு செய்யும் பண்ணைக் கொள்முதல் விலைக்கும் வியாபாரிகள் வாங்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்கும் வகையில், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் சார்பாக 50 லட்சம் முட்டைகளை ரூ. 5.70 விலையில் நாளை முதல் கொள்முதல் செய்து, பேக்கிங் செய்து வட மாநிலங்களுக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.
என்இசிசி அறிவிக்கும் விலைக்கே முட்டையை பண்ணைகளில் விற்க வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில் முதல் படியாக 7 வட்டாரக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அந்தந்த பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக் குழு தினசரி மாலை 7 மணியளவில் கலந்து பேசி அடுத்த நாளுக்கான விற்பனை விலை என்ன என்பதை முடிவு செய்து, தங்களது பரிந்துரையை நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத் தலைவருக்கு பரிந்துரை செய்வார்கள்.
அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட விற்பனை விலையை வியாபாரிகள் சங்க தலைவர் என்இசிசி தலைவருடன் பேசி அவரின் ஒப்புதலுடன் அடுத்த நாளுக்கான முட்டை கொள்முதல் விலையை அறிவிப்பார். முட்டை கொள்முதல் விலையை நாளை 9ம் தேதி முதல் நாமக்கல் முட்டை வியாபாரிகள் சங்கத்திலிருந்து அறிவிக்கப்படும். அனைத்து பண்ணையாளர்களும் முட்டை வியாபாரிகள் சங்கத்திலிருந்து அறிவிக்கப்படும் கொள்முதல் விலைக்கு குறையாமல் முட்டையை விற்பனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முட்டை ஓடு வீக்காக உள்ள முட்டைகள் மட்டுமே சந்தையில் உற்பத்தி விலை மற்றும் விற்பனை விலை இடையே உள்ள வித்தியாசம் அதிகம் போவதற்கு ஒரு காரணியாக உள்ளது. எனவே 90 வாரங்களுக்கு மேற்பட்டுள்ள முட்டை கோழிகளை உடனடியாக அனைவரும் விற்பனை செய்ய வேண்டும் என இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகவலை நாமக்கல் மண்டல என்இசிசி உதவி பொது மேலாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.