Close
ஏப்ரல் 4, 2025 10:56 காலை

தீபத் திருவிழா: ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரா் வீதியுலா

வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்

காா்த்திகை மகா தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா, இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை  4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 5-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, கண்ணாடி ரிஷப வாகனத்தில் வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவா் விநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா வந்தனா்.

பெரிய வெள்ளி ரிஷப வாகனம் 150 ஆண்டு

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஐந்தாம் நாள் அன்று இரவு சுவாமி பவனி வரும் பெரிய வெள்ளி ரிஷப வாகனம் 150 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்கது. உலகிலேயே ஏன் ஈரேழு பதினாறு லோகங்களிலேயே இவ்வளவு பெரிய ரிஷப வாகனத்தை காண்பது அரிது. மேலும் சுவாமி ரிஷப வாகனத்தில் அமர்ந்தவுடன் பெரிய அளவிலான பூமாலைகள், பிரபை மற்றும் பிரம்மாண்டமான குடை ஆகியவற்றை சாற்றிய பின்பு பக்தர்கள் மத்தியில் வலம் வரும் போது கைலாயத்தில் சிவனும் சக்தியும் தம்பதி சமேதராக வலம் வருவது போலவே தோன்றும். இவ்வாறு சிறப்பு வாய்ந்த வெள்ளி ரிஷப வாகனத்துக்கு  150 ஆண்டுகளாகி விட்டது.இவற்றை வழங்கிய பெருமை மெ.க அன்னச்சத்திர கோட்டையூர் நகரத்தார்கள் அவர்களையே சேரும்.

பஞ்சமூா்த்திகள்  வீதியுலா

இரவு 10.00 மணிக்கு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தியம்மன், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள்  வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இன்று 63 நாயன்மாா்கள் வீதியுலா

தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலாவும், 63 நாயன்மாா்கள் வீதியுலாவும் நடைபெறும்.

இரவு 9 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடைபெறும். இத்துடன், வெள்ளி விமான வாகனங்களில் விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருகின்றனா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top