Close
டிசம்பர் 12, 2024 4:48 காலை

திருவண்ணாமலையில் மகாரதம் பவனி: போக்குவரத்தில் மாற்றம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாரதம் பவனி நாளை பத்தாம் தேதி அன்று நிகழ உள்ளது. இந்தத் தேர் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர்.

தேர் திருவிழாவின் போது பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் காவல்துறை அறிவுரைகளை வெளியிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கோயில் கோபுரங்களுக்கு எதிரிலும், மாட வீதிகளும் கற்பூரம் ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது.

மகாரத பவனி நடைபெறும் மாட வீதிகளை நோக்கி செல்லும், அசலியம்மன் கோயில் தெரு, பே கோபுரம் 3 வது தெரு, பேகோபுரம் பிரதான சாலை, கொசமடை தெரு ஆகிய வீதிகளின் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
மாடவீதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். மாடவீதிகளில் தேர் திரும்புவதற்கும் சங்கிலியை இழுத்துச் செல்லவும் வசதியாக, கடலைக்கடை சந்திப்பு, வன்னியர் மடம் சந்திப்பு கிருஷ்ணா லாட்ஜ் சந்திப்பு, காந்திசிலை சந்திப்பு ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதோ, இடையூறாக வாகனங்களை நிறுத்த கூடாது.

பக்தர்களுக்கு நீர்மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் என்ற போர்வையில் ஏமாற்றியும் மற்றும் மிரட்டியும் பக்தர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குற்றமாகும். குற்றச் செயல்களை கண்காணிக்க மாடவீதிகளிலும், கிரிவலப்பாதையிலும் பிரத்யேகமாக அதிவிரைவுப் படைகள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் வயதானவர்களையும், பத்திரமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். செல்போன், ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

சந்தேகத்துக்குரிய நபர்களையோ அல்லது பொருட்களையோ கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறையிடம் தெரிவிக்கவும். மாடவீதிகளில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்படி, தேர் மீது சில்லறை காசுகள், தண்ணீர் பாட்டில்கள், தானியங்கள் உள்ளிட்டவற்றை வீசக் கூடாது. மாடவீதிகளில் பாதுகாப்பற்ற வகையில் கட்டிடங்கள் மீது ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது.

பக்தர்களுக்கு இடையூறாக கிரிவல பாதை மட்டும் மாட வீதிகளில் உள்ள நிரந்தர கடைகளில் அதிக ஒலியுடன் கூடிய விளம்பர ஆடியோக்களை வெளிப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி சுதாகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top