Close
டிசம்பர் 12, 2024 12:34 மணி

தீபத் திருவிழா: தொடங்கிய மகா தேரோட்டம்

விநாயகர் தேர்

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை  4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.

அதன்படி, தீபத் திருவிழாவின் 6 -வது நாளான நேற்று திங்கட்கிழமை இரவு இரவு 10.30 மணிக்கு வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி விமானத்தில் சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தியம்மன், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தொடங்கிய மகா தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய திருவிழாவான 7-ஆவது நாளான இன்று பஞ்ச ரதங்களின் தேரோட்டம் துவங்கியது.

ஏழாம் நாளான இன்று அண்ணாமலையார் திருக்கோவில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கோவில் வளாகத்தை வலம் வந்து 16 கால் மண்டப அருகே அவரவர்களுக்கான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இன்று காலை  6.45 மணிக்கு மேல் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. முதல் தேரான விநாயகர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆன்மீக பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் அண்ணாமலைக்கு ‘அரோகரா’ உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்தத் தேர் மாட வீதிகளில் வளம் வந்து மீண்டும்  நிலைக்கு வந்தடைந்த பின்னர் தெய்வானை சமேத முருக பெருமான் தேரோட்டம் துவங்கும்.

அதன் பின்  அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம், அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் சி.ஜோதி, அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி, இராம.பெருமாள் மற்றும் கோயில் ஊழியா்கள், உபயதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா். தேர் திருவிழாவிற்காக  4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளி ரதத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top